புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, நாள்தோறும் 75 ஆயிரம் பேருக்கு உணவு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக, புதுவை கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி அரசுத்துறை அதிகாரிகளுடன் புயல், மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று சட்டசபையில் கேபினட் அறையில் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: “இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை புதுச்சேரியில் கனமழை என்றும்,சுமார் 70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், தமிழக பகுதிகளில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைவாரியாக அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து துறைகளும் தயார் நிலையிலுள்ளன. அனைத்து அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் விடுப்பின்றி பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளோம்.
தேவையான நிதியை நிதித்துறை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு தேவையான வசதிகள், உதவிகள் செய்யப்படும். தேவைப்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மின்துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டால் மதிப்பீடு செய்யப்பட்டு நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரிக்கு வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவையும் பயன்படுத்திக் கொள்வோம். மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. 75 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் உணவு வழங்க கல்வித்துறைக்கு உணவு வழங்கும் அட்சயாபாத்திரா நிறுவனம் தயாராக உள்ளது. கூடுதல் உணவு தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்துள்ளோம். பள்ளி, கல்லூரி விடுமுறை அந்நேரத்தில் அறிவிக்கப்படும். மத்திய அரசு உதவிகள் தேவைப்படும் நேரத்தில் கேட்போம்” என்று முதல்வர் கூறியுள்ளார்.