புதுடெல்லி: ஐரோப்பிய யூனியனில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் உக்ரைனில் மருத்துவம் பயின்ற சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இதையடுத்து, மத்திய அரசு அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 9 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியாவின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷ்யாவுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றதும் இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர மீண்டும் உக்ரைனுக்கு வர வேண்டும்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் உள்ளூர் பாரம்பரிய பண்டிகைகளின் ஓர் அங்கமாக தீபாவளி மாறிவிட்டது. எனவே, கார்கிவ் நகரில்அடுத்த ஆண்டு வரும் தீபாவளியை உங்களுடன் கொண்டாட விரும்புகிறோம். உலக அரங்கில்இந்தியா மிகவும் முக்கிய சக்தியாக விளங்குகிறது. இந்திய பிரதமர் மோடி தனது குரலின் மூலம்மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.