இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘வெண்ணிலா கபடிக் குழு’. இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்த ஹரி வைரவன்.
‘குள்ளநரி கூட்டம்’, ‘நான் மகான் அல்ல’ திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஹரி வைரவன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் . சர்க்கரை நோய், அதிக உடல் எடை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள் என்று சமீபத்தில் அவரது மனைவியும் உதவி கோரியிருந்தார். நடிகர் ஹரி வைரவனின் உடல்நிலை சரியில்லாத புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து கடந்த டிசம்பர் 3ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்தார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசிய விஷ்ணு விஷால், “மறைந்த நடிகர் வைரவன் எனக்கு நெருங்கிய நண்பர். கடந்த 6 மாதமாக அவருடன் தொடர்பில்தான் இருந்தேன். கடந்த 6 மாதமாக என்னால் முடிந்த உதவிகளை அவருக்குச் செய்துவந்தேன். அவர் மனைவியிடம், உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என உறுதியளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.