சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, அணை நீர் மட்டம் 119.72 அடியாக உள்ள நிலையில், இந்த ஆண்டில் இன்று மூன்றாவது முறையாக 120 அடியை எட்டவுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 8,440 கன அடியாக இருந்தது. இன்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 662 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரை விட, நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர் மட்டம் நேற்று 119.44 அடியாக இருந்தது, இன்று 119.88 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 93.28 டிஎம்சி-யாக உள்ளது. கடந்த ஜூலை 16ம் தேதி முதல் முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த அக்., 12ம் தேதி இரண்டாவது முறையாக அணை நீர் மட்டம் 120 அடியை எட்டியது.
தற்போது, அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இன்று மூன்றாவது முறையாக அணை நீர் மட்டம் 120 அடியை எட்டவுள்ளது. அணை மூன்றாவது முறையாக 120 அடியை எட்டிவிடும் வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.