அமிர்தசரஸ்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து லாரி ஒன்று ஆப்பிள் ஏற்றிக்கொண்டு பிஹார் நோக்கி புறப்பட்டது. இந்த லாரி கடந்த சனிக்கிழமை பஞ்சாபில் அமிர்தசரஸ் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள பதேகர் சாஹிப் மாவட்டப் பகுதியில் செல்லும்போது நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதையடுத்து லாரியில் அட்டைப் பெட்டிகளில் இருந்த ஆப்பிள்களை கிராம மக்களும் அவ்வழியே செல்வோரும் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில் பஞ்சாபின் பாட்டியாலா நகரைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங், மொகாலியை சேர்ந்த குர்பிரீத் சிங் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் போலீஸாரை அணுகி, பழங்கள் திருடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை தாங்கள் ஈடுசெய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ரூ.9.12 லட்சத்துக்கான காசோலையை ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோப்போரை சேர்ந்த லாரி உரிமையாளர் ஷாகித்திடம் வழங்கினர்.
இதுகுறித்து குர்பிரீத் சிங் கூறும்போது, “விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு உதவுவதற்கு பதிலாக சிலர் ஆப்பிள் பெட்டிகளை திருடுவதில் மும்முரமாக இருந்தது வேதனை அளித்தது. பஞ்சாபில் நடந்த இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவே அதே பஞ்சாபில் இருந்து நல்ல செய்தியை மக்களுக்கு சொல்ல விரும்பினோம்” என்றார்.
லாரி உரிமையாளர் ஷாகித் கூறும்போது, “பிறருக்கு உதவுவதில் பஞ்சாப் மக்கள் எப்போதும் பெயர் பெற்றவர்கள். இங்கு இதுபோல் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. பஞ்சாபில்தான் நான் படித்தேன். இங்குள்ள மக்கள் எப்போதும் உதவிசெய்ய முன் வருவார்கள் என்பதை நான் அறிவேன்” என்றார். இதனிடையே ஆப்பிள் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.