CM Stalin Train : தென்காசி செல்லும் ஸ்டாலின்… ரயில் பெட்டியில் இத்தனை வசதியா ?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணத்திற்காக பொதிகை ரயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளது போன்று பல்வேறு வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வே நிர்வாகத்தின் IRCTC நிர்வாகம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக ‘சலூன்’ என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது.

இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரியஹால், டைனிங் டேபிள், உட்கார சோபா, நாற்காலி, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு.
சமையலறையில் தேவையான பாத்திரங்கள், சுடுநீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர், போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.

இது ரெயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படுவதால் பின்புறம் இருக்கும் ஜன்னல் மூலமும் இயற்கை அழகை ரசிக்க முடியும். பெரிய நட்சத்திர விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த ரெயில் பெட்டியில் IRCTC நிறுவனம் வழங்குகிறது. பயணிகள் தொந்தரவு இல்லாத பயணத்தை இதில் மேற்கொள்ள முடியும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சொகுசு சலூன் பெட்டியில் பயணம் செய்ய இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. பொதுமக்களும் இதுபோல் பயணம் செய்ய விரும்பினால் ரூ.2 லட்சம் கட்டினால் சலூன் பெட்டி இணைக்கப்படும். அவர் தென்காசியில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பொதிகை ரயிலில் பயணிக்க உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன்முதலாக விமானத்தில் செல்லாமல், ரயிலில் பயணம் செய்கிறார். தொடர்ந்து, நாளை காலை குற்றாலத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நாளை இரவு மதுரை திரும்பி அங்கு ஓய்வெடுக்கிறார். பின்னர், நாளை மறுதினம் (டிச. 9) மதுரையில் மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.