இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்; ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்

சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த நவம்பர் 12-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்த தேர்தலில் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 24 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள். இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 37 ஆயிரத்து 845, ஆண் வாக்காளர்கள் 28 லட்சத்து 54 ஆயிரத்து 945 ஆக இருந்தனர். இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர். இவர்களுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

எனினும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியது.

காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அக்கட்சி அளித்தது.

ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் நிறுவனர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் பிரசாரம் செய்தனர். அந்த கட்சி 300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் என வாக்குறுதிகளை வாரி வழங்கியது.

இதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ந்தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, குஜராத் சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து இமாசல பிரசேத தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவையாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல இடங்களில் முன்னிலை பெற்று காணப்பட்டது. பா.ஜ.க.வும் பின்தொடர்ந்து வந்தது.

எனினும், இரவு 7 மணியளவில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்று உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 24 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 67 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஓரிடத்தில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது. அதில் வெற்றி பெற்றால் பா.ஜ.க.வின் வசம் 25 தொகுதிகள் இருக்கும்.

இதனால், மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், கூடுதல் தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. இமாசல பிரதேசத்தில் அக்கட்சி ஆட்சியமைப்பதும் உறுதியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சரவெடிகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.