கடன் மோசடி வழக்கு: சுரானா நிறுவன இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி!

வங்கிகளிடமிருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக கைதான வழக்கில் சுரானா நிறுவன இயக்குனர் விஜயராஜ் சுரானாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்து சுமார் 4,000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டது.

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பும் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் ஜாமின் கோரி சுரானா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான விஜயராஜ் சுரானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்களுடன் தனக்கு தொடர்பில்லை என வாதிட்டார். இயக்குனராக இருந்த மற்ற இரு நிறுவனங்களின் பொறுப்பிலிருந்தும் ஏற்கனவே விலகி விட்டதால் இந்த வழக்கிற்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதால், ஜாமின் வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கியிடம் கடன் பெற்ற மோசடியில் விஜயராஜ் சுரானாவிற்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு உள்ளதால் தனக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென மனுதாரர் கோர முடியாது என தெரிவித்தார். இதனை அடுத்து, ஜாமின் கோரிய விஜயராஜ் சுரானாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.