மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் தற்போது பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டமானது, நான்கு வருடங்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலான வேலை என்ற போதிலும் இதில் இணைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னொருபுறம் இத்திட்டத்திற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கடற்படை தனது அனைத்து பிரிவுகளிலும் பாலின சமத்துவத்துக்கு வழிவகுக்கும் வகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் மூலம் பெண்களை மாலுமிகளாக சேர்க்க முடிவு செய்தது. அதன்படி, அக்னிபாத் திட்டத்தில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள 3000 மாலுமிகளில் 20% பெண் மாலுமிகளை தேர்வு செய்து, பயிற்சி முடிந்ததும் போர்க்கப்பல்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்தது.
அக்னிபாத் திட்டத்தில் சேர, ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை, வரம்புகளுடன் விண்ணப்பிக்க இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கால அவகாசம் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 3314 இளைஞர்கள் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் மூலம், இந்தப் பிரிவில் 314 பெண்கள் முதன்முறையாக பெண் மாலுமிகளாக நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.

இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் கூறுகையில்,“அக்னிபாத் திட்டத்தில் இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 314 பெண்களுக்கும், இதுவரை ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே பயிற்சிகள் அளிக்கப்படும்; பயிற்சிகள் முடிந்ததும் கப்பலில் உள்ள காலியிடங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் பெண் மாலுமிகள் கப்பலில் பணி அமர்த்தப்படுவர்.
தற்போது ஏழு முதல் எட்டு பிரிவுகளில் மட்டுமே பெண் மாலுமிகள் நியமிக்கப்பட்ட நிலையில், பாலின சமத்துவ அடிப்படையில் இந்திய கடற்படையில் இனிவரும் காலங்களில் அனைத்து பிரிவுகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தலைமை பதவிகளிலும் பெண்களின் பங்கு இருக்கும்” என்றார்.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் இனி கடற்படையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் நிறைந்திருக்கும் என்று நம்பலாம்.
– மா. பிரதீபா