கம்யூனிஸ்ட் சாதனையை சமன் செய்த பாஜக – நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம்

குஜராத்தில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று, தனது முந்தைய சாதனையையே முறியடித்திருக்கிறது. தொடர்ந்து 6 முறை குஜராத்தில் ஆட்சியமைத்து கோட்டையை எழுப்பிய பாஜக தற்போது 7வது முறை வெற்றிபெற்றிருப்பது அரசியல் உலகில் பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இது மேற்குவங்கத்தில் தொடர்ந்து 7 முறை ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்திருக்கிறது.
1977ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 7 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று, மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. அதில் சத்காசியா தொகுதியிலேயே 4 முறை போட்டியிட்டு மேற்கு வங்கத்தின் முதல்வராக 4 முறை பதவிவகித்தார் ஜோதி பாசு. இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையையும் இவர் பெற்றார். அதற்கடுத்து, புத்ததேப் பட்டாச்சார்யா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 2000ஆம் ஆண்டுமுதல் 2011ஆம் ஆண்டுவரை 3 முறை முதல்வராக பதவி வகித்தார். இப்படி தொடர்ந்து 7 முறை கம்யூனிஸ்ட் கட்சி மேற்குவங்கத்தில் ஆட்சியமைத்து சாதனை படைத்தது. அதன்பிறகு 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
image
அதேபோன்றதொரு அரசியல் சாதனையை படைத்திருக்கிறது பாஜக. குஜராத் மாநிலத்தில் கடந்த 1998 முதல் 2022 வரை நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று 7வது முறை ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. 1998ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு கேஷுபாய் படேல் முதல்வராக பதவியேற்றார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 2001ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக கட்சி தலைமையால் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து 2012 வரை, அதாவது இந்திய பிரதமராக பதவியேற்கும் வரை, நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக திகழ்ந்தார்.
image
அவரை அடுத்து, ஆனந்திபென் படேல், அவரைத் தொடர்ந்து விஜய் ரூபானி முதல்வர்களாக இருந்தனர். கொரோனா காலகட்டத்தில் மக்கள் விஜய் ரூபானியின் அரசின்மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், ”செயல்படாத முதல்வர்” என்று அழைக்கப்பட்டார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கட்சி நிர்வாகம் பூபேந்திர படேலை 2021ஆம் ஆண்டு முதல்வராக நியமித்தது. இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கட்லாடியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். ஏற்கனவே பரப்புரையின்போது மீண்டும் பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்படுவார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
image
தற்போது பாஜகவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தில் டிசம்பர் 12ஆம் தேதி பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் அறிவித்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் பூபேந்திர படேல் பதவியேற்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.