கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்தால் ரூ. 25,000 அபராதம்; அதிர்ச்சி தரும் கட்டுப்பாடுகள்!

தமிழகம் முழுவதிலும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பலவகை கட்டுப்பாடுகள் செலுத்தப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், ஒரே சாதியில் பெற்றோர் விருப்பமின்றி காதல் திருமணம் செய்வோரை எல்லாம் ஊரை விட்டுத்தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது என பலவகை கொடுமையான கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளன.

கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொடுமைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், மாதவிடாய் நாள்களில் பெண்கள் ஊருக்கு வெளியேதான் தங்க வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்தால் ஊருக்குள் நுழையக்கூடாது, அபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கொடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

தொகரப்பள்ளி கிராமம்.

ரூ.25 ஆயிரம் அபராதம்!

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தில், சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் திருமணம் செய்வோர், ஊர் பஞ்சாயத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், ஊர் மணியக்காரர் என்ற பெயரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இருவரை நியமித்து, அவர்களின் வழியாக இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.

இக்கிராமத்தில் நிலவும் இந்தக் கட்டுப்பாட்டால், சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் கடும் பாதிப்பையும், மன உளைச்சலையும் சந்தித்துள்ளனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் மகன் கோபி (24). டிப்ளோமா படித்த இவர், கடந்த ஜனவரியில், அத்திப்பள்ளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். கிராமத்தின் கட்டுப்பாட்டை கோபி குடும்பம் மீறியுள்ளது எனக்கூறி, அந்த ஊரின் மணியக்காரராக உள்ள அறிஞர் (தி.மு.க ஒன்றிய செயலாளர்), கோபி குடும்பத்துக்கு அபராதம் விதித்ததுடன், அபராதம் கட்டத்தவறினால் ஊரை விட்டு தள்ளி வைப்பதுடன், அவர்கள் குடும்பத்துடன் யார் பேசினாலும் அவர்கள் பஞ்சாயத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கோபி குடும்பத்தார்.

இதனால், சொந்த ஊருக்குள் தனிமைப்படுத்தப்பட்டது கோபியின் குடும்பம். கடந்த மாதம், நாகராஜின் தாயார் இறந்த போது இறுதிச்சடங்கில் கூட கிராம மக்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இந்த கிராமத்தின் கட்டுப்பாடுகள் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. `நவீன உலகத்துல இன்னுமா இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்குறாங்க’ என விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

`அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க’!

`காதல் மற்றும் சாதி மறுப்பு திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம் விதிக்கும் கட்டுப்பாட்டை ஏன் பின்பற்றுகிறீர்கள்?’ என்ற கேள்வியுடன், தொகரப்பள்ளி ஊரின் மணியக்காரர் என அழைக்கப்படும் அறிஞரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். “சார்… எங்களுக்குள்ள (கோபி குடும்பத்துக்கும் இவருக்கும் இடையே) கருத்து வேறுபாடு இருக்கு. அதனால, வேணும்னே கிளப்பி விட்டுட்டாங்க. கட்டுப்பாடுகள் பின்பற்றுகிறோம்னு சொல்றது உண்மைக்கு புறம்பானது; இங்க அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. கிராம மக்கள் எல்லாம் அவுங்க வீட்டு இறுதிச்சடங்குக்கு போகலைன்னு கதைய கட்டீட்டாங்க. டி.எஸ்.பி வந்து விசாரிச்சுருக்காங்க’’ என மழுப்பலான பதில்களைக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

தி.மு.க ஒன்றிய செயலாளர் அறிஞர்.

மத்துார் போலீசாரிடம் பேசியபோது, “5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறுமியை அந்த கிராமத்து இளைஞர் திருமணம் செய்ததால், பெரும் பிரச்னை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, தொகரப்பள்ளி கிராமத்தில் இந்த கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

`பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள்’!

இது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசிடம் போனில் பேசினோம். “கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டுமென்பது தான் வி.சி.க–வின் கோரிக்கை. ஏனெனில் இந்த ஓராண்டில் மட்டுமே, இப்பகுதிகளில் சாதி மறுப்பு திருமணம் செய்த பத்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். `எவிடென்ஸ்’ அமைப்பு சர்வே எடுத்ததில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அதிகளவு வன்கொடுமைகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தொகரப்பள்ளியில் ஒரே சாதியில் திருமணம் செய்தாலும், சாதி மறுப்பு திருமணம் செய்தாலும், அபராதம் விதிப்பதென்பது மிகவும் பிற்போக்குத்தனமாக கட்டுப்பாடு.

இது போன்ற வன்கொடுமை சம்பவங்களில், முதல் குற்றவாளி மாவட்ட கலெக்டர், இரண்டாவது குற்றவாளி மாவட்ட போலீஸ் எஸ்.பி. தான். ஏனெனில், இப்படியான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவது குறித்த தகவல், உளவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்திருக்க வேண்டும்.

வன்னி அரசு

கலெக்டர், எஸ்பிக்கு தான் பொறுப்பு

சட்டப்படி மாதந்தோறும், மாவட்ட கலெக்டர், எஸ்.பி., பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் தலைமையில், `விழிப்பு கண்காணிப்புக்குழு’ கூட்டம் நடத்தி, கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகள், பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை விவாதித்து தீர்வு காண வேண்டும்; இந்த கண்காணிப்புக் குழுக்களுக்கு தலைவர் முதல்வர்தான்.

தமிழக அரசு மாநிலம் முழுவதிலும், வன்கொடுமைகள் அரங்கேறுவதை தடுக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். `விழிப்பு கண்காணிப்புக்குழு’ கூட்டங்கள் உண்மையில் நடக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். ஊர்த்தலைவர், மணியகாரர் என்ற பெயர்களில், கிராமங்களில் கட்டுப்பாடுகள் விதிப்போரை கைது செய்ய வேண்டும். வன்கொடுமைகள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது வி.சி.க–வின் கோரிக்கை’’ என்றார்.

வன்கொடுமைகள், பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள், சமூக நீதிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானவை. `சாதிய – மத பாகுபாடு, வன்கொடுமைகளுக்கு எதிரானவர்கள் நாங்கள்’ எனக்கூறி வரும் தி.மு.க அரசு இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க சாட்டையை சுழற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.