அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது வெற்றிக் கணக்கை துவங்கியுள்ளது. முற்பகல் 11 மணி நிலவரப்படி, குறைந்தது 7 தொகுதிகளையாவது கைப்பற்றும் என்று கணிக்கப்படுகிறது. 182 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 179 தொகுதிகளில் ஆம் ஆத்மி தமது வேட்பாளர்களை களமிறக்கியது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் குஜராத் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
“5 ஆண்டுகள் எங்களுக்குக் கொடுங்கள், நாங்கள் எங்களை நிரூபிக்காவிட்டால் எங்களைப் புறக்கணியுங்கள்” என்ற கோரிக்கையோடு களம் கண்டது ஆம் ஆத்மி. ஆனால், 25 ஆண்டுகள் ஆட்சி செலுத்தி ஆலமரம் போல் அசைக்க முடியாத பாஜகவை எதிர்த்து சமாளிக்குமா ஆம் ஆத்மி? இல்லை, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தடம் பதிக்காமல் திரும்புமா என்ற விவாதங்கள் கூட நடைபெற்றன. ஆனால், ஆம் ஆத்மி கட்சியோ கருத்துக் கணிப்புகள், விவாதங்களை எல்லாம் பொய்யாக்கி தடம் பதித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் தேர்தலுக்கு முன்னதாக டெல்லி மாநகராட்சி தேர்தலை சந்திக்க நேர்ந்தது. தனது கோட்டையான டெல்லியை தக்கவைக்க ஆம் ஆத்மி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இடையிடையே சிறு தொய்வு ஏற்பட்டது. இந்த திடீர் சுமையும் கூட ஆம் ஆத்மிக்கு பின்னடைவு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், 5 முதல் 7 தொகுதிகள் என்பது ஆம் ஆத்மிக்கு நல்ல தொடக்கமே என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியினர் இந்த வெற்றி தங்களைப் பொறுத்தவரை நல்லதொரு சமிக்ஞை. தேசிய அரசியலில் தாங்கள் தடத்தை விரிவுபடுத்த உதவியுள்ளது. பாஜகவை எதிர்க்கும் சக்தியுள்ள கட்சியாக ஆம் ஆத்மி இனி மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் என்று பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
குஜராத்தில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி தான் போட்டியிடும் கம்பாலியா தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அங்கே அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் |