மோர்பி: தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்த மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த அக்டோபர், 30-ம் தேதி குஜராத் மாநிலம், மோர்பியில் ஆற்றின் குறுக்கே இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அண்மைக்காலத்தில் நாட்டில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. விபத்துக்கு சில நாட்கள் முன்பே புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது இப்பாலம். இதனால், பாஜக அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
நடந்துமுடிந்த தேர்தலில் இந்த விபத்து எதிரொலிக்கும் எனவும் கூறப்பட்டது. இதனால் மோர்பி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. மாறாக, பாஜக சார்பில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த காந்திலால் ஷிவ்லால் அம்ருதியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு இந்த விபத்து பாதிப்பு ஏற்படுத்தும் என கூறப்பட்ட நிலையில், காந்திலால் மீண்டும் மோர்பி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த பாஜகவின் காந்திலால் 62,079 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ஜெயந்திலால் ஜெராஜ்பாய் படேல், ஆம் ஆத்மி கட்சியின் பங்கஜ் ரன்சாரியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். காந்திலால் அம்ருதியா 113701 வாக்குகளும், படேல் 52121 வாக்குகளும் பெற்றனர். ஆம் ஆத்மி வேட்பாளர் பங்கஜ் ரன்சாரியா 17261 வாக்குகள் பெற்றார்.
பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டபோது காந்திலால் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார். மீட்பு பணிகளுக்காக ஆற்றில் குதித்து சிலரை காப்பாற்றினார். இந்த வீடியோக்கள் அப்போது வைரலாகின. “மோர்பி ஹீரோ” என வலைதளங்களில் அவர் கொண்டாடப்பட்டார். இதையடுத்து அவரை வேட்பாளராக பாஜக அறிவிக்க, இப்போது வெற்றியை ஈட்டியுள்ளார்.