ராய்பூர்: சத்தீஸ்கர் முதல்வரை நேரில் சந்தித்த தமிழக டெல்டா விவசாயிகள், அவருக்கு பாரம்பரிய நெல் வகைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உணவு உற்பத்தியை பல மடங்காக பெருக்கிடவும், கால்நடைகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினால் மட்டுமே கிராமங்களும், விவசாயிகளும் தற்சார்பு உள்ளவர்களாக மாறி தன்மானத்துடன் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டுமென்றால், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஓரளவிற்காவது நியாயமானதாக கிடைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில், நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500-ம், கரும்பிற்கும் மாநில அரசின் கூடுதல் ஆதரவு விலையை பரிந்துரை செய்து வழங்குவேன் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், கடந்த தேர்தலிலன்போது வாக்குறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் விதமாக நெல் குவிண்டாலுக்கு ரூ 2660-ம், கரும்பிற்கு இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் வழங்காத விலையாக கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4000-ம் கொள்முதல் விலை வழங்கி, நெல் கொள்முதலில் சத்திஸ்கர் மாநிலம் நிகழாண்டில் சுமார் 95 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியை இலக்காகக் கொண்டு வரலாற்று சாதனையை செய்துள்ளார்.
மேலும், அம்மாநில விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக முதல்வரின் உழவர்கள் வெகுமதி திட்டத்தின் கீழ் ஏக்கர் ஒன்றிற்கு ரூ 10000-ம் வேளாண் உற்பத்தி இடுபொருள் மானியமாக வழங்கி,விவசாயிகளை ஆதரித்து வருகின்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் விவசாய சேவையை பாராட்டி, தமிழ்நாடு காவிரி நதி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சுவாமிமலை சுந்தர. விமலநாதன் தலைமையில் 3 பெண்கள் உள்பட காவேரி டெல்டாவை சேர்ந்த 11 விவசாயிகள் கடந்த 6-ம் தேதி இரவு 8 மணி அளவில் சத்தீஸ்கர் சென்றனர்.
இந்நிலையில், கரியாபந்த் மாவட்ட தலைநகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்டிருந்த அம்மாநில முதல்வர் பூபேஸ்பாகலை நேரில் சந்தித்து, அவருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, சீரக சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிவித்தும், தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல்லில் தயாரிக்கப்பட்ட மணமூட்டும் அவல், நெற்பயிர் கொத்துக்களையும் வழங்கி நெல் விவசாயிகள் சார்பில் மகிழ்ச்சியோடு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.