புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற குமார் சிங்கம்புணரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். அப்போது மேலைச்சிவபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் குமார் பேருந்து சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் காப்பாற்றிய பின் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஓட்டுநர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.