புதுச்சேரி: புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் அலைகள் சீற்றம் இன்று அதிகரித்துள்ளது. காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பொழிவு உள்ளது. புயலால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க கட்அவுட், பேனர் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து இன்று புயலாக மாறி உள்ளது. மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள புயல் நாளை இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு கனமழை பெய்யக்கூடிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி புதுவையிலும் புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, காற்றினால் கட்அவுட், பேனர்கள் சரிந்து விழுவதை தடுக்கும் வகையில் இவற்றை வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகர், புறநகரில் பேனர், கட்அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வானிலை முழுமையாக மாறி, குளிர்ந்த காற்றுடன் இருண்டு காணப்படுகிறது. இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலுள்ள 15 கிராமங்களில் மீன்பிடிக்க செல்லவில்லை. குறிப்பாக காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை மீன்பிடிக்க செல்லாததால் விசைப்படகு, பைபர் படகு உள்ளிய்ய ஆயிரக்கணக்கான படகுகள் தேங்காய்திட்டு மீனவ கிராமத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
புயலால் புதுச்சேரியில் கனமழையுடன் 70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் விடுப்பின்றி பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் தயாராக உள்ளன. 75 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் உணவு வழங்க கல்வித்துறைக்கு உணவு வழங்கும் அட்சயாபாத்திரா நிறுவனம் தயாராக உள்ளது. கூடுதல் உணவு தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.