அகமதாபாத்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முன்னணி நிலவரம் குறித்த அறிவிப்பின்படி, குஜராத்தில் பாஜக அருதிப் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் நடனமாடி உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் |
பாஜக தொண்டர்கள் உற்சாகம்: குஜராத்தில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 182 தொகுதிகளில் குறைந்தபட்சம் 92 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். இன்று (டிச. 8) காலை 9.30 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாஜக 123 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை இந்த அறிவிப்பு தெரிவிப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் அகமதாபாத்தில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, காலை 9.30 மணி நிலவரப்படி பாஜக 123 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. சுயேட்சைகள் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறார்கள்.
குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை: குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 182 பார்வையாளர்களும் 182 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் ஆளும் பாஜக மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் போட்டி இட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 181 தொகுதிகளில் போட்டியிட்டன.