மாண்டஸ் புயல்: அலர்ட் செய்த இறையன்பு ஐஏஎஸ்!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்
கனமழை
முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.

** தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

** கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

** கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும்.

** வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

** முன்னெச்சரிக்கை செய்திகள் TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

** பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

** மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

** பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து பல் துறை மண்டலக் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

** மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.

** மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

** தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும். பால் மற்றும் பால்பவுடர் விநியோகம் தடையில்லாமல் நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.

** பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

** நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

** அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும். நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.

** 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

** பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

** நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

** இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

** மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் அறிவுரைகளின்படி புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.