புதுடெல்லி: பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் சேவை செய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு ரயில்வே அமைச்சர் அரசு அளிக்கும் மானியங்கள் விவரத்தை தெரிவித்தார்.
இது குறித்து ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தனது எழுத்துபூர்வமான அளித்த பதில்: ”ரயில் பயணக் கட்டணங்கள் மலிவு விலையில் இருக்க அதிக மானியம் வழங்கப்படுகிறது. ரயில்வே புறநகர் உள்ளூர் / சாதாரண, புறநகர் அல்லாத உள்ளூர் / சாதாரண, அஞ்சல் / எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்கள், கரிப் ரத், கதிமான், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, மஹாமனா, வந்தே பாரத், ஹம்சஃபர், தேஜாஸ், தட்கல் கட்டணம், சிறப்பு கட்டணங்களில் சிறப்பு ரயில்கள் போன்ற பல்வேறு வகையான ரயில் சேவைகளை ரயில்வே துறை வழங்கி வருகிறது.
அதன்படி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மலிவு விலையில் ரயில் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு வகை ரயில் சேவைகளுக்கு வேறுபட்ட கட்டண கட்டமைப்புகள் உள்ளன. ரயில்வே நெட்வொர்க் பல்வேறு மாநில எல்லைகளுக்குள் இடையே உள்ளதால், இந்திய ரயில்வே மாநில வாரியாக ரயில் சேவைகளை இயக்குவதில்லை. இருப்பினும், தென்னக இரயில்வே, தமிழக மாநிலத்தில் அமைந்துள்ள நிலையங்களுக்கு முதன்மையாக சேவை செய்கிறது. 2 ஜோடி கரிப் ரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 4 ஜோடி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் சேவைகளை இயக்குகிறது” என்று அமைச்சர் தனது பதிலில் கூறினார்.
முன்னதாக, திமுக எம்.பியான கதிர் ஆனந்த் தனது கேள்வியில், ”ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில்வே சேவைகள் புரிய ரயில்வே அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? வடஇந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கரீப் ரத் மற்றும் ஜன் சதாப்தி ரயில் சேவைகள் மிகவும் குறைவாக உள்ளது உண்மையா?” எனக் கேட்டிருந்தார்.