சென்னையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றிய மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் எழில்நகர் ஏ.பிளாக்கில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி உதயகுமார். இவரது மகன் விக்னேஷ் (23) கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷ் மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்ததால், இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தின இரவும் இது தொடர்பாக தந்தை-மகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த உதயகுமார் வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து மகனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் பலத்த காயம் அடைந்த விக்னேஷின் ஆல்ரெடி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மகனை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாக உள்ள தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.