வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புகையல் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்பொழுது 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் நாளை (09.12.2022) காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.