தஞ்சாவூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் நாகராஜ் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு திருமணமான விஷயம் இளம் பெண்ணுக்கு தெரிய வந்ததால் அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
நாகராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு இளம் பெண் அகல்யா ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நூலகத்திற்கு சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பாததால், அக்கம் பக்கம் தேடிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வடசேரி பாசன வாய்க்காலில் இளம் பெண் ஒருவரின் உடல் கிடைப்பதை கண்டறிந்தனர். அந்த உடல் காணாமல் போன அகல்யா தான் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அகல்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில் இறுதியாக அவர் நாகராஜிடம் பேசியதை தெரிந்து கொண்டனர்.
அவரை கைது செய்து விசாரித்ததில் அகல்யா திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கொலை செய்ததாக நாகராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அகல்யாவை கொலை செய்து புதுக்கோட்டை சாலை வழியாக காரிலேயே பல கிலோமீட்டர் பிணத்துடன் அலைந்து வடசேரி வாய்க்காலில் கொண்டு சென்று போட்டதை போட்டதாக தெரிவித்துள்ளார்.