சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று (நவ.9) இரவு வழக்கம் போல் இயங்கும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்’ புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் அதீத கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இன்று (நவ.9) இரவு வழக்கம் போல் இயங்கும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.