இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை பெற்று வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களை பெற்றுள்ளது. சுயேட்சை கட்சிகள் 3 இடங்களை பெற்றுள்ளது.
காங்கிரஸ் வெற்றி பெற்றததை தொடர்ந்து, அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சரவெடிகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டம் சிம்லாவில் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in