ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் மறுப்பதும் காவல்துறைக்கே அதிகாரம்: நீதிமன்றம் உத்தரவு!

ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோவை நகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை எஸ் பி க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் மற்றும் கோவை நகர காவல்துறை ஆணையர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் கூலி உயர்வை வலியுறுத்தி, வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல்நிலையத்தில் மனு அளித்ததாகவும் ஆனால் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். நிராகரிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஊர்வலத்தை அனுமதிப்பது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த உத்தரவை காவல்துறை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த மனு விசாரணைக்கு உகந்த அல்ல என்று வாதிட்டார்.

வால்பாறையிலிருந்து கோவை வரை 105 கிலோ மீட்டர் தூரத்திற்கு உரிய பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்றும் , மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, கோவையில் ஊர்வலம் நடத்த தகுந்த சூழல் இல்லை எனவும், கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். வால்பாறையில் இருந்து கோவை வரை ஊர்வலம் செல்லும் போது அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்பதால், வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நிராகரிப்பட்டதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் அனுமதி மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் என்று கூறிய மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.