எந்த மழை, புயல் வந்தாலும் சமாளிக்க தயார்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

எந்த மழை, காற்றடித்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்தப் பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வைத்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று இரவு 11 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கும் மாண்டஸ் புயல், அதிகாலை 3 மணிக்குள் கரையைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.

சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வரும் நிலையில் புயல் நிலவரங்கள் தொடர்பாகவும், மீட்பு மற்று நிவாரணப் பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பிற மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் காணொலி காட்சியின் மூலமாக முதலமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களின் பாதுகாப்பிற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மானிட்டரிங் ஆபிசர் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கவனித்து, என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எவ்வளவு மழை வந்தாலும் எவ்வளவு காற்றடித்தாலும் அதை சமாளிப்பதற்கும், அதிலிருந்து மக்களை காப்பதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பொது மக்கள் அரசு மூலமாக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்தால், சூழ்நிலையை வெற்றிகரமாக கையாளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.