வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயல், மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரபாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில், முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் மொத்த உயரமான 21 அடியில், நீர் மட்டம் 17 அடியாக உள்ளது. குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை சற்று நின்றதையடுத்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. அதன்படி, செம்பரபாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. எனவே, செம்பரபாக்கம், புழல், பூண்டி ஏரிகளின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.