திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவர் பெரியபாளையம் பேருந்து நிலையத்திற்கு எதிரே பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
தற்போது, புயல் காரணமாக இந்தப் பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று விடியற்காலை இந்தப் பேக்கரியில் இருந்து கரும்புகை வெளிஏறுவதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடையின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், அரை மணி நேரமாக போராடியும் கதவை திறக்க முடியாததனால் ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு கதவை உடைத்து பாரத்தனர்.
அப்போது, கடையின் உள்ளே தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர். இந்த தகவலை படி, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.
பேருந்து நிலையத்திற்கு அருகே நடைபெற்ற இந்த தீ விபத்தால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதில், ரூ.20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.