புதுச்சேரி: புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பாதிப்பை நேரில் பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, ஆறுதல் தெரிவித்ததுடன், உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் மீதமிருந்த பொருட்களை தெருவில் எடுத்து வைத்திருந்தனர். அரசு தரப்பில் தூண்டில் வளைவு அமைக்காததால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி மக்கள் ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, அதிகாரிகள் அங்கு நேரில் வருவதாக உறுதி தந்ததால் போராட்டத்தை ஒத்திவைத்தனர். சிறிதுநேரத்தில் ஆட்சியர் வல்லவன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். புயல் – மழை எச்சரிக்கையையொட்டி புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் ஆய்வை முடித்துக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, முத்தியால்பேட்டை கடற்கரைப் பகுதிகளில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பிள்ளைச்சாவடி பகுதிக்குச் சென்றார்.
கடல் அரிப்பால் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்த பகுதிகளை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, ஊர் பஞ்சாயத்தார் உடனிருந்தனர். ஆய்வுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “கடல் அரிப்பால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். ஏற்கெனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கெனவே தொடங்கி ரூ.30 லட்சம் மதிப்பிலான கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.
தற்போது கடல் சீற்றம் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சீற்றத்தால்தான் கடும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டும் பணி மீண்டும் தொடங்கும். புயலையொட்டி மக்கள் பாதுகாப்பதாக இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புயலையொட்டி அனைத்துத் துறைகளும் தயார்நிலையில் உள்ளன” என்றார்.