மேற்கு திசை அரபிக்கடலில் இருந்து, கிழக்கு நோக்கிச்சென்ற மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பலத்த காற்றால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பூங்காக்களில் மரம் விழுந்துள்ளது. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. படகுகள் இயக்கமுடியாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதலே, மாண்டஸ் புயலில் வெளி வட்டத்திற்கு, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பலத்த காற்று, சாரல் மழையுடன் செல்லத் துவங்கியது. அதிகாலையில், காற்றின் வேகம் 50 கிலோ மீட்டரை தாண்டியது. மழையும் தொடர்ந்து பெய்ததால், மலைச்சாலையிலும், நகர்ப்பகுதிகளிலும், பல இடங்களில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின்சாரமும் தடைப்பட்டது.
அரசு தரப்பில், இடர்பாடு மீட்புத்துறை, நகராட்சி, நெடுஞ்சாலை, வனத்துறை, ஊரக நிர்வாகங்கள் இணைந்து, இடர்பாடுகளை மீட்கும் பணியிலும், போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளிலும், துரித கதியில் ஈடுபடத் துவங்கினர். மலைப்பகுதிகளில் உள்ள குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
காற்றின் வேகத்தால், ஏரியில் படகுகள் இயக்கமுடியாத நிலை இருந்தது. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி, சேதம் அடையாமல் இருக்க, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம், அதனை பாதுகாப்பாக கட்டி நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நகரில் உள்ள பிரயண்ட் பூங்காவில், சில மரங்கள் காற்றின் வேகத்தில் விழுந்தது. அதனை பூங்கா ஊழியர்கள் அப்புறப்படுத்தி சீர் செய்தனர்.
பிற்பகலை தாண்டி, காற்றின் வேகம் குறைந்து, மழை தொடர்ந்த நிலையில், மலைப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டத்துவங்கி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை நாள் முழுவதும் பாதிப்படைந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
