மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் மகாபலிபுரத்தி இன்றிரவு 8 மணி முதல் கரையைக் கடக்க தொடங்குகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பு குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதையொட்டி சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாபல்கலைக்ககழத்தின் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பேருந்து, ரயில் சேவைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து
சென்னையில் புறநகர் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மற்றும் மழையின் வேகத்தைப் பொறுத்து ரயில்கள் ரத்து செய்யவும் முடிவெடுத்துள்ள தெற்கு ரயில்வே இது குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சூழ்நிலைக்கு ஏற்ப ரயில்கள் ரத்து மற்றும் இயக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
புயல் கரையைக் கடப்பதையொட்டி எந்நேரமும் சென்னை புறநகர் ரயில்கள் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் அதற்கேற்ப முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியில் சென்றிருப்பவர்கள் புறநகர் ரயில் பயணத்தை நம்பியிருக்க வேண்டாம். ஏனென்றால், ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டால், கடும் சிரமத்துக்குள்ளாக வேண்டியிருக்கும், அதற்கேற்ப, பெண்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்டோர் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவது சிறந்தது.