சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலிங்ன மேற்கு வடமேற்கு திசையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டு உள்ள நிலையில், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகசென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில்,நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று மதியம் முதலே பலத்த காற்றுடன் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும், மாண்டஸ் புயலானது இன்று இரவு கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் மழையும் இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை விமான நிலைய இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.