சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னையில் 3 மணி நேர இடைவெளியில் சுமார் 65 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் மரங்கள் விழுந்துள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்களின் துணை கொண்டு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுமான வரையில் இரவுக்குள் மரங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக கரையை கடந்து விடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் மழை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.