கடலூர்: “மாண்டஸ் புயல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலின் வேகம் 80 கிலோ மீட்டர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை இன்று (டிச.9) காலை ஆய்வு செய்தார். கடலூரில் இருந்து புறப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை செய்து கடலுக்கு செல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை நகரில் தங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரின் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவிப்பொறியாளர்கள் ஞானசேகர்,குமார், வட்டாட்சியர்கள் சிதம்பரம் ஹரிதாஸ், காட்டுமன்னார்கோவில் வேணி, புவனகிரி ரம்யா, ஸ்ரீமுஷ்ணம் சேகர் மற்றும் மின் வாரிய, நெடுஞ்சாலைத்துறை, ஊராக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி, பேரூராட்சி, கால்நடைபராமரிப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கூறியதாவது , “புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 80 கிலோ மீட்டர் இருக்கும் என கூறப்பட்டுள்ளதால், கிள்ளை, முடசல் ஓடை பகுதியில் அனைத்து படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் தேசிய பேரிடம் மீட்டு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக காற்று வீசும்போது மின் கம்ங்கள், மரங்கள் விழும் வாய்ப்பு உள்ளது.
அதனை அப்புறப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி, போர்க்கால அடிப்பைடையில் பணியாற்ற தயார் அதிகாரிகள் நிலையில் உள்ளனர். அதேபோல் மாவட்டத்தில், புயல் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு, 223 தங்கும் இடங்கள், அடிப்படை வசதிகளோடு தயார் நிலையில் வைத்துள்ளோம், ஒவ்வொரு புயல் பாதுகாப்பு மையத்திலும் பொறுப்பாளர் ஒருவர் நியமித்து தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தாழ்வான பகுதிகள் மற்றும் பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம்.
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, இரு தினங்களுக்கு தேவையான பால் மற்றும் குடிநீர் வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் என்பது போன்ற பாதுகாப்பான நடைமுறைக்கு மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
ஊரக வளரச்சி துறை மூலம் இரு நாட்களுக்கான தண்ணீ்ர் வழங்கப்படடு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும், மின் கம்ப சேதம் மற்றும் மின் துறை பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்யும் வகையிலும் 26 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் உள்ளனர்” என்றார்.