மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்… 20000 மாங்குரோவ் மரங்கள் வெட்டப்படும்!

மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியோடு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். குஜராத்தில் இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு சமீபத்தில்தான் மாநில மாநில அரசு மும்பை-பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் நிலம் ஒதுக்கி கொடுத்தது. பாந்த்ரா-குர்லாவில் இருந்துதான் புல்லட் ரயில் புறப்படும் வகையில் டெர்மினஸ் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரே அரசு இத்திட்டத்திற்கு நிலம் ஒதுக்கிக்கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது.

மும்பை ஐகோர்ட்

அதோடு மகாராஷ்டிரா எல்லைக்குள் நிலத்தை கையகப்படுத்த தேவையான உதவிகளையும் செய்து கொடுக்காமல் இருந்தது. தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் மகாராஷ்டிரா எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கான வேலைகள் தீவிரம் அடைந்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் புல்லட் ரயில் தடம் வரும் வழியில் இருக்கும் 20 ஆயிரம் மாங்குரோவ் மரங்களை வெட்ட அனுமதிக்கவேண்டும் என்று கோரி தேசிய விரைவு ரயில் கழகம் மனு ஒன்றை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு நிகராக 5 மடங்கு வேறு இடத்தில் மாங்குரோவ் செடிகள் நடப்படும் என்று தேசிய விரைவு ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தொண்டு நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் புதிதாக நடப்படும் மாங்குரோவ் செடிகள் எந்த அளவுக்கு உயிர்பிடித்து வளரும் என்பது தொடர்பாக எந்த வித ஆய்வும் நடத்தப்படவில்லை என்றும், மாங்குரோவ் மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை என்று வாதிட்டனர்.

புல்லட் ரயில்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புல்லட் ரயில் திட்டத்திற்காக 20 ஆயிரம் மரங்களை வெட்ட தேசிய விரைவு ரயில் கழகத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனால் கட்டுமானப்பணிகள் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புல்லட் ரயில் தடம் அமைக்கப்படுவதால் அகமதாபாத்திற்கு 2.30 மணி நேரத்தில் செல்ல முடியும். தற்போது வழக்கமான ரயிலில் அகமதாபாத் செல்ல 6.30 மணி நேரம் பிடிக்கிறது. மும்பையை சுற்றி கடற்கரையோரம் இருக்கும் மாங்குரோவ் மரங்கள்தான் நகரை கடலின் சீற்றத்தில் இருந்து பாதுகாத்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.