Cyclone Mandous Live:மாண்டஸால் வந்த சோதனை – சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் நேற்று முதலே மழை வெளுத்துவாங்குகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மழை மற்றும் காற்று காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்க தொடங்கியிருக்கிறது. அதேசமயம் கடலில் எழும் அலைகளை காண்பதற்கு மக்கள் கடற்கரைக்கு வர ஆரம்பித்தனர். ஆனால் அப்படி செல்வது பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

மாண்டஸ் புயலின் தீவிரம் புதுச்சேரியில் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கிருக்கும் தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா ஆகியவை மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, மாண்டஸ் புயலானது இன்னும் மூன்று மணி நேரத்தில் வலுவிழந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.