Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் அலெர்ட் – மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயலானது இன்று நள்ளிரவு கரையை கடக்கவிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்துவாங்குகிறது. எனவே சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்திருக்கிறது. பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கனமழையால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து உயர் அலுவலர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பொதுமக்களுகு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்களுக்கு, “மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து, காற்று வீசும்போது மரத்தின் அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகளின் அருகிலும், திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.