புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தை தொடங்கினர்.
உத்தர பிரதேம், ஹரியாணா, ஒடிசா, சத்தீஸ்கர், பிஹார் மற்றும் தென் மாநிலங்கள் சிலவற்றில் இருந்து இந்த விவசாயிகள் வந்துள்ளனர். கையில் காங்கிரஸ் கட்சி கொடியுடன் இவர்கள் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என முழக்கம் எழுப்பினர்.
இது குறித்து அகில இந்திய கிசான் காங்கிரஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்கோவிந்த் சிங் திவார் அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு, விவசாயிகளுடன் ஒத்துழைப்பதும் இல்லை, அவர் களின் பிரச்சினைகளை தீர்ப்பதும் இல்லை. வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம் முடிவடைந்து ஓராண்டு ஆகிவிட்டது.
ஆனால் உறுதி அளிக்கப் பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. கடந்தாண்டு நடந்த விவசாயி கள் போராட்டத்தில் உரிமைகளுக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் பட்டியல் கூட மத்திய அரசிடம் இல்லாதது துர்அதிர்ஷ்டம்.
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நேரடி பலன் கிடைக்கும் வகையில் முறையான சட்டம் இன்னும் நாட்டில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.