கோலங்கள் – எதிர்நீச்சல் வித்தியாசம் சொன்ன இயக்குநர்

சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் இயக்கிய அனைத்து தொடர்களிலுமே பெண்களுக்கும், பெண்கள் விடுதலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக 'கோலங்கள்' தொடரின் அமோக வெற்றியை தொடர்ந்து தற்பொது 'எதிர்நீச்சல்' தொடரும் வெற்றிநடை போட்டு வருகிறது. அதிலும், தொடரின் ஆரம்பம் முதலே சைலண்டாக இருந்த பம்பாய் ஞானம் கதாபாத்திரத்தை வைத்து சமீபத்தில் அவர் கொடுத்து வரும் டுவிஸ்டை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் ரசித்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் சின்னத்திரை நடிகையும் தற்போது எதிர்நீச்சல் தொடரின் வசனகர்த்தாவுமான ஸ்ரீவித்யா கோலங்களில் வரும் பெண்களுக்கும் எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று இயக்குநர் திருசெல்வத்தை கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர், 'கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா ஆகியோர் வீட்டில் சுதந்திரமாக இருந்து வெளியே சுதந்திரத்தை தேடியவர்கள்.

ஆனால், எதிர்நீச்சலில் வரும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் வீட்டிற்குள்ளேயே சுதந்திரத்தை இழப்பதால் தங்கள் சுயத்தையும் இழந்தவர்கள். அதனால் வெளியிலேயும் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள். எனவே, அவர்கள் முதலில் வெளியே வருவார்கள். சுயத்தை மீட்பார்கள். சுதந்திரமாக வாழ்ந்து மிகப்பெரிய வெற்றியை காண்பார்கள். அப்படி பார்த்தால் கோலங்கள் பெண்களும் சரி எதிர்நீச்சல் பெண்களும் சரி வெற்றி பெற்றவர்களே' என்று கூறியுள்ளார்.

திருசெல்வத்தின் இந்த பதிலால் பெண் ரசிகைகள் பலரும் மகிழ்ச்சியடைந்து அவரை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.