பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலவி வந்த மக்னா யானை ஒன்று (தந்தம் இல்லாத ஆண் காட்டுயானை) குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உணவாக உட்கொண்டு வந்தது. கடந்த 10 மாதங்களில் சுமார் 50 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. மனிதர்களையும் தாக்கி வந்தது. இந்த யானையைப் பிடிக்க வலியுறுத்தி பந்தலூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலவி வரும் மக்னா யானையைப் பிடித்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க வேண்டுமென வனத்துறை உத்தரவைப் பிறப்பித்தது.

இதன் அடிப்படையில் மக்னா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த 18 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். கூடலூர் அருகில் உள்ள புளியம்பாறை பகுதியில் நேற்று மதியம் மக்னா யானை உலவுவதை உறுதி செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான்கு கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை லாரியில் ஏற்றி முதுமலை அடர் வனப் பகுதியில் விடுவித்தனர். யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மக்னா யானையைப் பிடித்து முதுமலையில் விடுவித்தது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், ” பி.எம் – 2 என பெயரிடப்பட்ட பந்துலூர் மக்னா யானை பல மாதங்களாக குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்தது. இந்த யானையைப் பிடித்து முதுமலையில் விடுவிக்கும் பணியில் 50-க்கும் மேற்ப்பட்ட வனத்துறை பணியாளர்கள் கடந்த 18 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று மதியம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முதுலையிலிருந்து வரவழைக்கப்பட்ட வசிம், விஜய், சுஜய், கிருஷ்ணா ஆகிய கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினோம். கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பரிசோதனை செய்து கழுத்தில் ரேடியோ காலர் பொறுத்தினர். அதிகாலை 2.30 மணியளவில் முதுமலை காங்கிரஸ் மட்டம் பகுதியில் விடுவித்தோம். யானை நல்ல உடல்நிலையில் இருக்கிறது. மேய்ச்சலிலும் ஈடுபட்டு வருகிறது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் ” என்றனர்.