நெல்லை: `மாண்டஸ்’ புயல் கரையை கடந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முன் எச்சரிக்கை உத்தரவால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்த்தனர். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. புயல் காரணமாக தூத்துக்குடி சென்னை இடையே நேற்று 2 விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே தூத்துக்குடி தெற்கு பீச்ரோடு ரோச் பூங்கா அருகே நேற்று காலை சுமார் 30 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு நிலவியது.
தென்மாவட்டங்களில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டமாக இருந்தது. பிற்பகலில் சில பகுதிகளில் சிறிது நேரம் காற்று சற்று பலமாக வீசியது. பிற்பகல் மற்றும் இரவில் சில பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான நிலவரப்படி ராதாபுரம், பாளையில் தலா 2.40 மிமீ மழை பெய்தது. மூலைக்கரைப்பட்டியில் 2 மிமீ, களக்காடு பகுதியில் 1.20 மிமீ மழை பெய்தது. மணிமுத்தாறு பகுதியில் 0.60 மிமீ மழை மட்டும் ெபய்தது. தூத்துக்குடி, ெதன்காசி மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 626.51 கனஅடிநீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து 704.75 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 97.90 அடியாக உள்ளது. சேர்லாறு அணை நீர் மட்டம் 108.56 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 88.10 அடி. அணைக்கு 230 கனஅடிநீர் வருகிறது. 45 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 50 அடியாக உள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி பகுதியில் 6.50 மிமீ மழையும், குண்டாறு பகுதியில் 1 மிமீ மழையும் பெய்தது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் மழை இல்லை.