வடக்கு கிழக்கில் இறந்த கால்நடைகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானம்

சமீபத்திய காலநிலை மாற்றத்தின் காரணமாக ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த பசுக்கள் , எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலை மாற்றத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடை வள பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த கால்நடைகள் தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..

யாழ் மாவட்டத்தில் 49 பசுக்களும் 58 ஆடுகளும் இறந்துள்ளதுடன் 17 பசுக்களும் 50 ஆடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வன வள பாகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டதில் இறந்த பசுக்களின் எண்ணிக்கை 168.  மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை ஆறு. பாதிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை மூன்று.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 பசுக்கள் இறந்துள்ளன. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159.இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 42.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 21 பசுக்கள் இறந்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 17. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 85.

கிழக்கு மாகாணத்தில் இறந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 478 என பதிவாகியுள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 352. இதேபோன்று இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 65.

இந்தியாவை பாதித்த சூறாவளியையடுத்து கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலையினால் கால் நடைகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, ஆனால் இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து கால்நடைகளின் மாதிரிகளையும் கால்நடை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கால் நடைகளின் இறைச்சியை பயன்படுத்தல், எடுத்துச்செல்லல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் அந்தந்த மாகாண கால்நடைப் பணிப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது குளிர் காலநிலை குறைந்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், விவசாய அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க இந்த விலங்குகளின் இறைச்சியை நுகர்வு அல்லது போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.