வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தெஹ்ரான்: ஈரானில் ‘ஹிஜாப்’புக்கு எதிராக போராடிய பெண்களின் கண், மார்பு ஆகியவற்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் துணி மற்றும் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிறப்புப் படையும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக ஈரானில் பெண்கள் கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக தீவிரமாக போராடி வருகின்றனர்.
செப்., 13ல் ஒழுங்கற்ற முறையில் ஹிஜாப் அணிந்து இருந்ததாக மாஷா அமினி, 22, என்ற பெண் மீது சிறப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், கோமா நிலைக்குச் சென்ற அந்தப் பெண், அடுத்த ஓரிரு நாட்களில் மரணம் அடைந்தார். இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்தது. பெண்களுக்கு ஆதரவாக பல இடங்களில் ஆண்களும் களம் இறங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈரான் அரசு, சிறப்புப் படை மட்டுமின்றி ராணுவத்தையும் களம் இறக்கி போராட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுத்தது. பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கிக் குண்டுகளுக்கு பதில், ‘பால்ரஸ்’ குண்டுகளை நிரப்பி சுட்டனர். இதனால், அந்தக் குண்டுகள் உடலுக்குள் நுழைந்து கடும் உபாதையை ஏற்படுத்தியது.
![]() |
இந்நிலையில், காயம் அடைந்தவர்கள் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறியதாவது: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பல பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது கடும் அதிர்ச்சி அடைந்தேன். கண், மார்பு, பிறப்புறுப்பு ஆகியவற்றை குறிவைத்து சுட்டிருந்தனர்.
ஒரு பெண்ணுக்கு மார்பு, தொடை ஆகிய இடங்களில் துளைத்திருந்த பால்ரஸ் குண்டுகளை எளிதாக அகற்றி விட்டேன். ஆனால், பிறப்புறுப்புக்குள் பாய்ந்திருந்த இரண்டு குண்டுகளை அகற்ற மிகவும் சிரமப்பட்டோம். அது அந்தப் பெண்ணுக்கு எதிர்காலத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் ஆண்களுக்கு தொடை, முதுகு மற்றும் இடுப்பு ஆகிய இடங்களை குறிவைத்து சுட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், பல டாக்டர்கள் கூறிய தகவலையடுத்து ஈரான் மக்கள் கடும் அதிர்ச்சியும், அரசு மீது தீவிர வெறுப்பும் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஈரான் அரசு போராட்டக்காரர்களுக்காக சற்று இறங்கி வந்து, ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்கும் சிறப்புப் படையை கலைத்து விட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement