"உதயநிதியை அமைச்சராக்குங்கள்; அவர் நடித்த படங்களை பார்க்கச் சொல்லாதீர்கள்!"– அண்ணாமலை தாக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் பிரிவுகள் சார்பில் ’மாற்றத்திற்கான மாநாடு’ நடந்தது.  இந்த மாநாட்டில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர்  பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில்  பேசிய அண்ணாமலை, “தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. ’டார்க்கெட்’ வைத்து கல்லா கட்டும் அமைச்சர்கள், தமிழகத்தை சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றியுள்ளனர்.

மாநாட்டில் பேசிய அண்ணாமலை

டாஸ்மாக் மூலம் மட்டும் ஆண்டுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டுக்காண்டு  4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து வருகிறது.  மகளிர் இலவசப் பேருந்தில் பயணம் செய்தால் ’ஓசி பயணம்’  என அமைச்சர் ஒருவரே இழிவாகப்  பேசுகிறார். தி.மு.க அமைச்சர்கள் பேசுவதையெல்லாம் பார்க்கும்போது  அங்கு சமூக நீதி இல்லை என்பது தெரிகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய வெள்ளைக்கார அரசு போலவும், பெண்களை மதிக்க தெரியாத கட்சியாகவும்  தி.மு.க  அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  

நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்கிறது. கப்பம் கட்டிதான் ஆக வேண்டிய  சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர். லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைதான் தமிழகத்தில் நிலவி வருகிறது.  பால் விலை , மின்சார கட்டணத்தை உயர்த்தியதால் மகளிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதாக வாய்கோளறு அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று முதுகெலும்பு இல்லாத அரசு கூறுகிறது. மக்கள் மெட்ராஸ் ஐ வந்து அவதிப்பட்டு வருகின்ற பொழுது ’கழகத் தலைவன்’ திரைப்படம் குறித்து கருத்து கேட்கிறார் முதல்வர். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள். அதற்காக அவர் நடித்த  படங்களையெல்லாம்  பார்க்கச் சொல்லாதீர்கள்.

தமிழகத்தில் இன்றைக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை உள்ளது.  அதை வரும் பொங்கலுக்கு பார்க்கத்தான் போகிறார்கள். தி.மு.க அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவில்லை. திமுக-வை மக்களை ஏற்கவில்லை. அங்கன்வாடி, பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்குவதில் சாதனை படைத்துள்ளார் இந்த மாவட்ட  அமைச்சர் கீதாஜீவன்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

அவருக்கு ’அழுகிய முட்டை அமைச்சர்’ என்று பெயர் வழங்கலாம். இது சாமான்ய மனிதர்களுக்கான காலம்.  பா.ஜ.க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும்.  அதற்காக நாம் பாடுபட வேண்டும். மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் 17 மாதங்கள் உள்ளன. 400 இடங்களைப் பெற்று மீண்டும் மோடி  பிரதமராக வருவார்” என்றார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.