கோவை: கோவையில் ஆளுநரை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில், தமிழக ஆளுநரை விமர்சிக்கும் வகையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘‘ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’’ என்ற தலைப்பில் ஆளுநரின் ஆண்டு செலவு 6.5 கோடி ரூபாய் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், ‘‘ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் தரும் மசோதா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்ட திருத்த மசோதா, நகராட்சி சட்டங்கள் திருத்த மசோதா, நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்பு சட்ட திருத்த மசோதா, டாஸ்மாக் நிறுவன விற்று முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா என மொத்தம் 22 மசோதா தொடர்பான விவரங்கள் ஆளுநர் அலமாரியில் கிடக்கிறது. இதற்கு மேலும் தமிழக மக்கள் குறட்டைவிட்டு தூங்க முடியுமா?, தூங்கினால் துயரப்பட நேரிடும்’’ எனவும் அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன. இந்த போஸ்டர் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.