புத்தாண்டு கொண்டாட்ட தேடலில் புதுச்சேரி முதலிடம்!| Dinamalar

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் தேடல் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இந்தியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகள் தாங்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்வதற்கான சமீபத்திய தேடல் தரவுகள் குறித்த தகவல்களை, தனியார் பயண ஏற்பாட்டாளர் இணையதளம் (Booking.com) வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை காலத்தை முன்னிட்டு, உள்நாட்டு பயணிகள் பதிவு செய்த முன்பதிவுகள் மற்றும் தேர்வு செய்த இடங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இந்திய பயணிகளால் அதிகம் விரும்பப்படும் உள்நாட்டு தேடல் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து லோனாவாலா மற்றும் மணாலி.ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இணையதள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், புதுச்சேரி மற்றும் கோவா ஆகியவை மிகவும் விருப்பமான கடற்கரை இடங்களாக இடம் பெற்றுள்ளன.
உதய்ப்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகியவை மிகவும் விரும்பப்படும் வரலாற்று இடங்களாகவும், லோனாவாலா, மணாலி, மூணார் மற்றும் சிம்லா ஆகியவை மிகவும் விரும்பப்படும் மலை வாசஸ்தல இடங்களாக உள்ளன.

மேலும், டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரையிலான தேதிகளில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 உள்நாட்டுப் பயண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் துபாய், இந்திய பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது.

அதே நேரத்தில் பாங்காக், சிங்கப்பூர் மற்றும் தென் கிழக்கு ஆசிய இடங்களும் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான இடங்களாக உள்ளன. டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரையிலான தேதிகளுக்குள் இந்தியப் பயணிகளால் அதிகம் தேடப்பட்ட இடங்களில் லண்டன், பாரிஸ், படோங் பீச், நார்த் மாலே, கொழும்பு, புக்கேட் மற்றும் உபுட் போன்ற இடங்களும் உள்ளன.
உலகளவில் சுற்றுலா பயணிகளால் தேடப்பட்ட முதல் 15 இடங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் மேலும் லண்டன், துபாய், ஆம்ஸ்டர்டாம், ரோமா, டோக்கியோ, பார்சிலோனா, ப்ராக், வீன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

latest tamil news

இது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:
இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக புதுச்சேரி இருப்பது, நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடியதாகும்.
கடந்த ஓராண்டில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு, சுற்றுலா துறையில் மேற்கொண்ட அபரிமிதமான வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றடைந்ததன் வெளிப்பாடே இந்த ஆய்வின் முடிவு. வரும் காலங்களில் புதுச்சேரியை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில், முதல்வர் வழிகாட்டுதலின்படி, அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து எதிர்வரும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.