சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோயில்

ருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருக்கானப்பேர், காளையார் கோயிலில் அமைந்துள்ளது.

ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையே” என வருந்திப் பாடினார். தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் இலிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் “காளையார்கோவில்” ஆயிற்று.

இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது. மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு “யானை மடு” என்று பெயர். இராமபிரான் இராவணனை அழித்த பிரம்மகத்தி தோஷம் நீங்க, இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. கோயிலுக்குள் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. தல விருட்சம் கொக்கு மந்தாரை.

இங்குள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருது பாண்டியர்களாலும் கட்டப்பட்டது. சோமேசர்– சவுந்தரநாயகி, சுவர்ணகாளீஸ்வரர் – சுவர்ணவல்லி, சுந்தரேஸ்வரர்– மீனாட்சி என மூன்று சிவனும், மூன்று அம்மனும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூன்று சிவன், மூன்று அம்மன் இங்கு மட்டுமே உள்ளனர். இதில் சுவர்ணகாளீஸ்வரர் தான் தேவாரப்பாடல் பெற்றவர். சண்டாசுரனைக் கொன்ற காளி, சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கி, சுவர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள்.


இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல சிவாலயங்களை தரிசித்து வந்தான். இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது.

சோமேசர் சந்நிதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்.

நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் – கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானை மடு. கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.

சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.