புனே ஆய்வுக்கூடம் அளித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவே முதல் முறை. நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எங்கள் துறை தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புனேவைச் சேர்ந்த 67 வயது நபருக்கு கடந்த மாதம் இறுதியில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர், நாசிக் பகுதியில் வசித்து வந்த நிலையில், நவம்பர் 6-ம் தேதி புனே வந்திருந்த போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
நவம்பர் 16-ம் தேதி கடும் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பிறகு, சிகிச்சையின் பயனாக அவர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.