இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் இலங்கை விஜயம்

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் அழைப்பின்பேரில் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 2022 டிசம்பர் 12 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளார்.

 இந்திய கடற்படைத் தளபதி அவர்கள் கொழும்பை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களால் இதயபூர்வமாக வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2.    இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன, மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னக்கோன் ஆகியோரை இந்திய கடற்படைத் தளபதி அவர்கள் சந்திக்கவுள்ளார். அத்துடன் பாதுகாப்பு செயலர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், 2022 டிசம்பர் 15ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அக்கடமியில் நடைபெறவுள்ள, பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்விலும் இந்திய கடற்படைத் தளபதி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.    இதேவேளை, இந்திய கடற்படைத் தளபதியின் விஜயத்திற்கு வலுவூட்டும் வகையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைக் கப்பலான சஹ்யாத்ரி 2022 டிசம்பர் 13ஆம் திகதி கொழும்பை வந்தடைந்து,  இலங்கை கடற்படையினருடனான சமுத்திர ஒத்துழைப்பு பயிற்சிகள் மற்றும் ஏனைய பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

4.    2022 மார்ச்சில் நடைபெற்ற SLINEX 21 வருடாந்த கூட்டுப் பயிற்சியின்போது இலங்கை கடற்படையினருடன் இந்திய கடற்படையினர் ஆழமான தொடர்புகளைப் பேணியிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். இலங்கையின் கடல்சார் ஆளுமையை மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்குடன் 2022 ஆகஸ்ட்டில் இந்திய கடற்படையினரால் சமுத்திரவியல் ஆய்வுக்கான விமானமொன்று இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல்  சமுத்திரம் சார்ந்த தொழில்நுட்பங்கள் உட்பட பல்வேறு விசேட மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த பயிற்சிகளும் இலங்கை கடற்படையினருக்காக இந்திய கடற்படையால் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

5.    இந்தியக் கடற்படைத் தளபதியின் இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவானதும் நெருக்கமானதுமான உறவினைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதுடன் இந்தியாவின் முன்னுரிமைக்குரிய பங்காளராக இலங்கைக்கு இடமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த விஜயம் இருநாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே உள்ள இருதரப்பு கடல்சார் உறவுகளை மேலும் வலுவாக்குகின்றது. அத்துடன், பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்துவதை நோக்கி ஆளுமையினை மேம்படுத்துதல் மற்றும் ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்தல், பொதுவாக கவனம் செலுத்தப்படவேண்டிய பாதுகாப்புசார் விடயங்கள் தொடர்பாகவும் இவ்விஜயத்தின்போது பேச்சுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான தோழமை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் வளர்ச்சியினையும் குறிப்பதாக இவ்விஜயம் அமைகின்றது.  

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு 

13 டிசம்பர் 2022.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.