அருணாச்சல பிரதேச மாநிலம் தாவாங்கு பகுதிக்கு அருகே உள்ள இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெடித்த மோதல் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த நிலையில், இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. பின்னர் இருதரப்பு வீரர்களும் தங்கள் பகுதிக்கு திரும்பிவிட்டதாக ராணுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதம் நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். எம்,பி அசாதுதீன் ஓவைசி, மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது. மேலும், “இந்திய சீன விரர்களின் மோதல் குறித்து நாடாளுமன்றத்திற்கு ஏன் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு நாட்டை இருளில் வைத்திருக்கிறது.” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “தேசிய பாதுகாப்பு பிரச்னைகளில் நாங்கள் தேசத்துடன் ஒன்றாக இருக்கிறோம், அதை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், ஏப்ரல் 2020 முதல் எல்லை கோடுக்கு அருகில் உள்ள அனைத்து கட்டங்களிலும் சீன அத்துமீறல்கள் மற்றும் கட்டுமானங்கள் குறித்து மோடி அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் சீன நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை விழிக்க வைக்க முயற்சித்து வருகின்றன, ஆனால் ஆளும் பாஜக தனது அரசியல் பிம்பத்தை பாதுகாக்க அமைதியாக இருக்கிறது” என கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மத்திய பா.ஜ.க அரசு வாட்டாரங்கள், “எந்தவொரு கலந்துரையாடலிலிருந்தும் மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்கவில்லை, உண்மைகளுடன் தயாராக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற சபையில் விளக்கம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்” எனத் தெரிவித்திருக்கிறது.